கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தாக்கத்திற்கிடையில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை தொடர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் 60 பைசாக்கள் குறைந்து கடந்த 17 மாதங்களின் புதிய உச்ச சரிவான டாலருக்கு எதிராக ரூ. 74.28 என்ற அளவில் வர்த்தகமானது. இதற்கிடையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் 0.87% சரிந்து ஒரு பீப்பாய் 32.93 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கி வருவதைக் காணும்போது முதலீட்டாளர்களிடையே ஒரு பதற்றம் உருவாகியுள்ளது, இந்த நோய்த் தொற்றினால் உலகெங்கிலும் சுமார் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வங்கிகளிடையே டாலர் கிடைப்பதை எளிதாக்கி, ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைக்க 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்க-விற்க போன்ற பணப்புழக்க நடவடிக்கைகளுக்கு புழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
நடப்பு மாதத்தில் இதுவரை, எப்.பி.ஐ.க்கள் (FPIs) இந்திய மூலதன சந்தைகளில் இருந்து ரூ. 33 ஆயிரத்து 163 கோடிகளை (4.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வெளியில் எடுத்துள்ளன. இதற்கிடையில், இந்திய ஈக்விட்டி சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக மற்றொரு கொந்தளிப்பான தொடக்கத்தைக் கண்டது.
சென்செக்ஸ் 3,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 30 ஆயிரத்துக்கு கீழே வர்த்தகம் ஆனது; தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் சரிவடைந்து 9 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமானது.
வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து குறைந்த புள்ளிகளில் வர்த்தகமானதைத் தொடர்ந்து இந்திய பங்கு சந்தை வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.