பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது. டெல்லி வன்முறை, கொரோனா போன்ற விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறோம். ஆனால், இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், பாஜக எதை விரும்புகிறதோ அதை மட்டுமே மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்ற சூழலை அக்கட்சி உருவாக்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரல்கள் யாவும் நசுக்கப்படுகின்றன. இதன் உச்சபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போதுகூட எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், அப்போது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை எங்களது தலைவர் ஸ்டாலின்கூட இன்று காலை கண்டித்துள்ளார். எனவே, மக்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: விசாரணை செய்யக் குழு ரெடி