குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் நேற்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவுசெய்வதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து நேற்று முன்தினம் தாயகம் திரும்பிய காங்கிரஸ் எம்எல்ஏ வஜிப் அலி ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குச் சென்றுள்ளார்.
மத்தியச் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகளின்படி வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் வஜிப் அலி இதனை மீறியதால் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து எஸ்எம்எஸ் மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தனது வாக்கினைப் பதிவுசெய்து வாக்களித்தார். மத்தியச் சுகாதார அமைச்சகத்தின் நெறிமுறைகளை மீறியதால் இவர் மீது பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.