குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 47 உயிர்களைப் பலிவாங்கிய இந்தக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கிய நிலையில், டெல்லி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கியது.
மாநிலங்களவைத் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன குரலை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்குத் தொடங்கிய மாநிலங்களவை மீண்டும் கடும் அமளிக்குள்ளானதால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவையிலும் இதே நிலை தொடர்ந்ததால் மக்களவையையும் நாளை வரை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். எதிர்க்கட்சிகளின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிரியாவில் அதிகரிக்கும் போர் பதற்றம்: மேலும் 19 வீரர்கள் உயிரிழப்பு