கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சரும் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமாகிய ஜி. பரமேஸ்வர் உறுப்பினராக உள்ள அறக்கட்டளை நடத்திய மருத்துவச் சேர்க்கையின் மூலம் ஏராளமான கறுப்புப் பணம் குவிந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து ஜி. பரமேஸ்வரின் பெங்களூரு வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனையை அலுவலர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக தும்கூருவில் உள்ள பரமேஸ்வருக்குச் சொந்தமான சித்தார்த் குழும நிறுவனத்திலும் நான்கு பேர் கொண்ட வருமானவரி அலுவலர்கள் சோதனை நடத்தினர். நாள்முழுவதும் நடந்த இந்தச் சோதனையில் சுமார் நான்கு கோடியே 52 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பரமேஸ்வரிடம் கேட்டதற்கு, வருமானவரித் துறை சோதனை நடைபெறுவது தமக்கு தெரியாது என்றும், சோதனையினால் எந்தப் பாதிப்பும் கிடையாது எனவும் தெரிவித்தார்.