சீனா உள்பட உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தெலங்கானாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது, அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியது. இதுகுறித்து தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எடேலா ராஜேந்திரா கூறுகையில்," கொரோனா வைரஸை எதிர்கொள்ள ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரைத் தனிமைப்படுத்தி வழங்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
இந்த வைரஸ் பன்றிக் காய்ச்சலை விட ஆபத்தானது அல்ல. இறப்பு எண்ணிக்கையும் 2 முதல் 3 விழுக்காடுக்கு மேல் இல்லை. சில அடிப்படை நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற உடல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை உடனே அணுக வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் அனைவரும் தனியாக கை துண்டுகள் வைத்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் முகமூடி வழங்கப்படும்.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் '104' என்ற உதவி மைய எண்ணுக்கு நாளை முதல் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒரு சிறப்பு மருத்துவமனையை நிறுவுவது தொடர்பாக யோசித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கொரோனா தொற்று - 21 இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கண்காணிப்பு