பிகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருவதால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக சம்பாரன், மதுபனி, முசாபர்பூர், சீதாமரி, தர்பாங்கா, கடிஹார் உள்ளிட்ட மாவட்டங்களை மழை வெள்ளம் முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 66ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பிகாரில் உள்ள கடிஹார் மாவட்டத்தில் உள்ள 'டங்கி டோலா' என்ற பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகள், உடமைகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். அடுத்த வேலை உணவுக்கு வழியில்லமால் எலிக்கறி சாப்பிடும் அவலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த தல்லா முர்மர் என்பவர் கூறியதாவது, வீடுகள் உடைமைகள் இழந்து நிற்கும் எங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் வயிற்றை நிரப்ப வேறு வழியில்லாமல் எலிக்கறி சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த சூழலில் எலி மட்டுமே எளிதில் கிடைப்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் எலிக்கறி சாப்பிடுகிறோம் என்றார்.
இந்நிலையில், பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இப்பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஷகீல் அகமது கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.