ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஷவாய் மதோபூர் மாவட்டத்தில் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ரயில் தண்டவாளங்களை தகர்த்தும், அதில் 'டெண்ட்' போல் அமைத்து உறங்கியும் வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்போராட்டம் குறித்து குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "எங்களுக்கு நல்ல முதலமைச்சரும், நல்ல பிரதமரும் இருக்கின்றனர். குஜ்ஜார் இன மக்களின் கோரிக்கைகளை அவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அவ்வளவு பெரிய கடினமான வேலை அல்ல" என்றார்.
குஜ்ஜார் இன மக்களின் இந்த போராட்டத்தால் மக்சூதன்பூரா வழியே செல்லும் ஐந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுதாகவும், ஒரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் மத்திய மேற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.