ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பங்கு உள்ளதாகவும் எனவே, அதில் கோபமடைந்த விவசாயிகள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களை சேதப்படுத்திவருவதாகவும் கூறப்படுகிறது.
தங்களின் கோபத்தில் மின்சார விநியோகத்தை துண்டித்தும் டவர்களின் கேபிள்களை அறுத்தும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உள்கட்டமைப்பை சேதப்படுத்துவதாக விவசாயிகள் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் முகேஷ் அம்பானிக்கு சொந்தான நிறுவனம் பெரும் பயனடையவுள்ளதாக கருதப்படுகிறது.
டிசம்பர் மாதம் மட்டும், ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 1,500 செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதுநாள்வரை, இதுகுறித்த ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட விரோதமாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களை நிறுத்த அரசு உடனடியாக தலையிட வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்மாதிரியான செயல்களில் ஈடுபடாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நிறுவனத்திற்கு சொந்தான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இசம்பவங்களுக்கு பின்னணியில் போட்டி நிறுவனங்களின் பங்கு உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.