தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதேபோல், கேரளாவில் வட்டியூர்க்காவு, அரூர், கோன்னி, எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. ஆனால் கனமழையின் காரணமாக வாக்குப்பதிவில் மந்த நிலையே காணப்பட்டது.
கனமழை காரணமாக கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையினால் எர்ணாகுளம் தொகுதியில் 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுகாஸ் பேசுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வாக்குப்பதிவை இரண்டாம் தளத்திற்கு மாற்றியுள்ளோம். காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் மழையால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு கல்லார்குட்டி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நெய்யார் உள்ளிட்ட நான்கு அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - களநிலவரங்கள் உடனுக்குடன்!