கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, டெல்லியில் 13,418 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 6,540 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அந்த நிலைமையை கையாள அரசு தயாராக இருக்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நான்காம் கட்ட ஊரடங்குக்கு பிறகு பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்குக்கு பிறகு, புதிதாக 3,500 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4,500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆனால், அதில், 2,000 படுக்கை வசதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மீதமுள்ள 2,000 படுக்கை வசதிகள் இன்றிலிருந்து கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,000 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மற்றவர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: மக்களோடு மக்களாக இணைந்த ராகுல் காந்தி