டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராக பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவான இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் உருவாகியிருந்தது.
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் 2019, ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் இந்த திரைப்படத்தை வெளியிட்டால், அது மக்களைத் திசை திருப்பும் செயலாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றஞ்சாட்டியதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகாரளித்தன.
தீபாவளி சரவெடி: சீன நிறுவனங்களை ஓரங்கட்டவரும் மைக்ரோமேக்ஸ் ‘ஒன்’
இதையடுத்து 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மின்னணு ஊடகங்களில் எந்தக் கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்தது.
தேர்தல் நடந்து முடிந்தபிறகு மே 24 அன்று இத்திரைப்படம் இந்தியா முழுக்க வெளியானது. இச்சூழலில் பி.எம். நரேந்திர மோடி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது. அக்டோபர் 15 முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும் பிகார் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை மறுவெளியீடு செய்ய அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மனுவளித்தனர். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், இந்த திரைப்படத்தின் மறுவெளியீடு, தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்றும் எனவே, இதற்கு தடைவிதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.