கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரங்கங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை 10 மாதங்களான மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வவ்போது அமல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகம் ஜனவரி 10ஆம் தேதி முதல் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொது மக்களுக்காக திறந்து விடப்படவுள்ள உலகப்புகழ் பெற்ற ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகம் திங்கள்கிழமை, அரசு விடுமுறை நாள்களை தவிர அனைத்து நாள்களிலும் திறந்திருக்கும். இதனை கண்டுகளிக்க விரும்பும் பார்வையாளர்கள் https://presidentofindia.nic.in, https://rashtrapatisachivalaya.gov.in/, https://rbmuseum.gov.in/ என்ற இணையத்தள முகவரிகளில் அதற்குண்டான கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து, நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்-தி-ஸ்பாட் முன்பதிவு வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யமுடியும். முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது, ஆரோக்யா சேது செயலி பயன்பாடு போன்ற கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, முன்பதிவு செய்பவர்கள் சுற்றிப்பார்க்க காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகபட்சம் 25 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலை, பண்பாடு, வரலாறு தொடர்பான நேர்த்தியான விலைமதிப்பற்ற கலைப்பொருள்களை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'பாஜகவின் அழுத்தத்தின் கீழ் நிதிஷ்குமார் செயலாற்றிவருகிறார்' - ராப்ரி தேவி