லோக் ஜன் சக்தி கட்சி தலைவரும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லியில் உள்ள ஃபார்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட பாஸ்வான் நீண்டகாலமாகவே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தனது அலுவலக பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக உள்ள பாஸ்வான், தனது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மகன் சிரக் பஸ்வானுக்கு வழங்கியுள்ளார். கரோனா காலத்தில் விலையில்லா பொருள்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பாஸ்வான் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.