குடியுரிமை சட்டத் திருத்த மசோதா டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவையில் அந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு கட்சியினர் இதுகுறித்த விவாதத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பு கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு, இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்த சட்டத் திருத்தத்தின் படி, மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது.
அதன்படி இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திருணமூல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன.
இதையும் படிங்க:
'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்!