நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. வெற்றியைத் தொடர்ந்து மே 30ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நட்பு ரீதியாக பாஜக நேற்று அழைப்பு விடுத்திருந்தது.
மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 'நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றி, மோடி என்ற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் வரிசையில் மக்களைக் கவர்ந்த தலைவர் மோடி' என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், 'மோடியின் எதிர்ப்பலையால்தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தோல்வி ஏற்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பாஜக கூட்டணிக்கு தோல்வியாக அமைந்தது. நதிகளை இணைப்பேன் என்று சொன்ன நிதின் கட்கரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, 'காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது. அவர் நின்று போராட வேண்டும். தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்தார்.