கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் தற்போது அரசியல் குழப்பம் மையம் கொண்டுள்ளது.
அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக முக்கிய இளம் தலைவரான சச்சின் பைலட் போர்க்கொடித் தூக்கியுள்ளார். அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 13) காலை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவித்து தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 90க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இன்றையக் கூட்டத்தில் கொறடா உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டும் சச்சின் பைலட் பங்கேற்காத நிலையில், அவர் மீது கட்சி நடவடிக்கை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், “ராஜஸ்தான் அரசைக் கலைக்க முயற்சிக்கும் பாஜகவின் சதிச்செயல் பலிக்காது. மக்கள் காங்கிரஸ் அரசுக்கு வாக்களித்துள்ளனர். இந்த ஐந்தாண்டு ஆட்சியை காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக நிறைவு செய்யும்” என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனிய காந்தி அவரது குடும்பத்தினர் எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சச்சின் பைலட்டும் தற்போதுவரை தனது முடிவு எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவில் இணையமாட்டேன் -சச்சின் பைலட் திட்டவட்டம்