கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என எதிர்பார்த்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
40 நாள்களைக் கடந்தும் ஊரடங்கு தளர்த்தப்படாததால் விளிம்பு நிலை மக்கள், தினக்கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் உணவின்றி திண்டாடி வருகின்றனர். இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் நடந்தே சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக ராஜஸ்தானிலிருந்து கர்நாடகாவின் சித்ரதுர்கா பகுதியில் 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். ஊரடங்கின் ஆரம்பத்தில் சமாளித்ததாலும், அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் உள்ள சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர்.
சித்ரதுர்கா பகுதியிலிருந்து 100 கி.மீ. வரை நடந்து சென்றவர்கள், அதன்பின் நடக்க முடியாமலும் உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ''எங்களில் சிலர் பானிபூரி கடைகளிலும், ஒரு சிலர் ஐஸ் க்ரீம் கடைகளிலும் வேலை பார்த்து வருகிறோம். ஊரடங்கு அறிவித்த சில நாள்களுக்குப் பின் எங்களிடம் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது.
எனவே ராஜஸ்தானில் உள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்து கிளம்பினோம். ஆனால் பெல்லாரிக்கு மேல் எங்களால் நடக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக எங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. நாங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு