ரயில் பயணிகளின் தேவைகளையும், குறைகளையும் விரைந்து விசாரித்து பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ரயில்வே நிர்வாகம் '139' எனும் புதிய ஒருங்கிணைந்த உதவி எண்ணை அறிவித்துள்ளது.
அவசர உதவி எண் '182'-ஐ தவிர்த்து, தற்போதுள்ள அனைத்து உதவி எண்களுக்கும் மாற்றாக, இந்தப் புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் அனைவரும், எளிதில் நினைவில் வைத்து, தங்கள் தேவைகளை விசாரிக்க இந்த ஒருங்கிணைந்த உதவி எண் வழிவகை செய்யும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்றொரு புறம் அவசர உதவி எண் 182ஆனது பயணிகளின் பாதுகாப்பு குறித்த சேவைகளுக்காக தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தற்சமயம் 12 மொழிகளில் வழங்கப்படவுள்ள இந்த 139 உதவி எண் IVRS எனப்படும் (Interactive Voice Response System) தொழில்நுட்பத்தைச் சார்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளைக் கோரும் பயணிகள் எண் 1-ஐ அழுத்தி மைய நிர்வாகிகளையும், பிற தேவைகளுக்கு எண் 2-ஐ அழுத்தி தேவைக்கெற்ற சேவைகளைப் பெறலாம்.
உணவு தொடர்பான புகார்களுக்கு எண் 3-ஐ அழுத்தியும், பிற பொதுவான புகார்களுக்கு எண் 4-ஐயும் தொடர்பு கொள்ளலாம்.
விழிப்புணர்வு தொடர்பான புகார்களுக்கு எண் 5-ஐயும், விபத்துகளின்போது தொடர்புகொள்ள என் 6-ஐயும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஏற்கனவே அளித்த புகார்களின் நிலை குறித்து அறிய எண் 9-ஐயும், மைய நிர்வாகிகளை *ஐ அழுத்தியும் தொடர்பு கொள்ளலாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குப்பையும் கோபுரமாகும்... நெகிழியில் உருவான ராட்சத ராட்டினம்!