மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "நாங்கள் மகாராஷ்டிரா அரசை ஆதரிக்கிறோம். ஆனால், அம்மாநிலத்தின் முடிவு எடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியில் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் கருத்து குறித்து பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், "சினாசேனா அரசையும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீதும் பழிசுமத்தும் நோக்கில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் அவசரமாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. தற்போது நடைபெற்று வரும் கூட்டணி அரசு ஒத்துழைப்பின்மை, கருத்து வேறுபாடு காரணமாக விரைவில் கவிழ்ந்து விடும்.
இது ஒன்றும் அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. பாஜகவின் முழு கவனமும் கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. மக்களை திசைதிருப்பும் வேலை இது. பெருந்தொற்றை திறம்பட கட்டுப்படுத்துமாறு அரசு மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
சுப்பிரமணியன் சுவாமி, நாராயண ரானே ஆகியோர் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பாஜகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க : ஒரு வயது குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காவல்துறை!