சமீப காலமாக பெரியாரிய இயக்கத்தினர் மற்றும் வலதுசாரி இயக்கத்தினரிடையே கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகேயுள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் காவி நிறம் ஊற்றிய சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. நேற்று (ஜூலை 17) காலை 5.30 மணியளவில் இதைக் கண்ட பெரியார் அமைப்பினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் பெரியார் சிலை மீதிருந்த காவி நிற பெயிண்டை தண்ணீர் ஊற்றி அகற்றினர். பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆளும் கட்சியான அதிமுக அரசும் கண்டித்தது.
பெரியார் சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பைின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது" என தமிழில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
![ராகுல் காந்தி தமிழில் ட்விட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8072181_ty.jpg)
இதையும் படிங்க: காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!