மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் நேரு குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியான அமேதியில் அவர் தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றம் செல்வதற்கு வயநாடு தொகுதி ‘கை’கொடுத்தது. இதையடுத்து, தன்னை வெற்றி பெறச்செய்து நாடாளுமன்றம் செல்ல வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாள் சுற்றப்பயணமாக ராகுல் காந்தி கேரளா வந்துள்ளார். அவரை கோழிக்கோடு விமான நிலையத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வரவேற்றார்.
இதன் இரண்டாவது நாளான இன்று, ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் திறந்த வாகனத்தில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அவரை பொதுமக்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் வரவேற்றனர்.
மேலும், மத்திய அரசு, பிரதமர் மோடி மீது அதிருப்தியில் உள்ள மக்களை காப்பற்ற காங்கிரஸ் முன்வரும் என்றும், தன்னை வெற்றிபெறச் செய்த கேரள மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றும் அப்போது ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.