மத்திய அரசு சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்திய ஒன்றியத்திலுள்ள சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் அடுத்தடுத்து தங்களது சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவின் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கல்பேட்டா பகுதியில் 'Save the Constitution' (அரசியலமைப்பைக் காப்பாற்றுவோம்) என்ற தலைப்பில் மாபெரும் பேரணி இன்று நடைபெற்றது.
வயநாட்டிலுள்ள எஸ்.கே.எம்.ஜே. உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி, இரண்டு கிலோமீட்டர் வரை சென்ற இப்பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இப்பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நாதுராம் கோட்சேவும் நரேந்திர மோடியும் ஒரே மாதிரியான கொள்கையைக் கொண்டவர்கள். ஆனால் மோடிக்கோ கோட்சேவின் கொள்கை மீது தான் நம்பிக்கை கொண்டவன் என சொல்லிக்கொள்ள தைரியம் இல்லை. அது ஒன்றை தவிர மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
மோடியிடம் வேலைவாய்ப்பின்மை குறித்து கேட்டால் அவர் உடனடியாக வேறு விவகாரங்களைப் பேசி திசைதிருப்பி விடுவார். காந்தியின் கொள்கைகளில் கோட்சேவுக்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் மகாத்மா காந்தியை அவர் சுட்டுக் கொன்றார்" என்றார்.
இதையும் படிங்க: பலப்படுத்தப்பட்ட பாஜக - ஷிரோமணி அகாலி தளம் கூட்டணி