நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இளைஞர்கள் கொதிப்பில் உள்ளனர். பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வந்தால், அவரை இளைஞர்கள் கட்டையால் தாக்குவார்கள் என்று ராகுல் பேசியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசினார். அப்போது சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் குற்றஞ்சாட்டுக்கு பதிலளித்தார். தான் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் தம்மால் எதையும் தாங்கிக் கொள்ள முடியும் என்றார்.
இதற்கு பதிலளிக்க தனது இருக்கையிலிருந்து ராகுல் காந்தி எழுந்தார். இதையடுத்து அவையில் சிறிது நேரம் கூச்சல் - குழப்பம் நிலவியது. இதற்கிடையில் நரேந்திர மோடி, தாம் 40 நிமிடமாக உரையாற்றி வருகிறேன். ஆனால் சில, 'ட்யூப் லைட்டுகளுக்கு' தாமதமாக புரிகிறது என கிண்டலடித்தார்.
இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், “ராகுல் காந்தியை பாஜகவினர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதிலிருந்தே அவரது வளர்ச்சி முன்னோக்கி இருக்கிறது என்பது தெரியும்.
ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஒரு சிறந்த கேள்வியை எழுப்பினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, சூரிய நமஸ்காரம் குறித்து விளக்கம் அளிக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலையில்ல திண்டாட்டம் ஆகிய பிரச்னைகளிலிருந்து சூரிய நமஸ்காரத்தால் என்ன தீர்வை கொடுக்க முடியும்? என்றும் வினாயெழுப்பினார்.
இதுமட்டுமின்றி நாட்டின் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு நடந்துகொள்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: ‘ராகுல் காந்தி ஒரு ட்யூப் லைட்’ - மக்களவையில் நக்கலடித்த மோடி