தேசிய தலைநகர் பகுதியின் வழியே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்த குடிபெயர் தொழிலாளர்களை ராகுல் காந்தி கடந்த 16ஆம் தேதி சந்தித்து பேசினார். இதுகுறித்த ஆவணப்படம் ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
சுமார் 16 நிமிடங்கள் ஓடும் அந்த ஆவணப்படத்தில், 20க்கும் மேற்பட்ட குடிபெயர் தொழிலாளர்களுடன் நடைபாதையில் அமர்ந்து ராகுல் உரையாடுகிறார். அவர்கள் சந்தித்த பிரச்னைகளை பொறுமையாக கேட்கும் ராகுல், அவர்கள் சொந்த ஊர்களுக்குத் செல்ல உதவுவதாக உறுதி அளிக்கிறார். இதையடுத்து, அவர்களுக்கு கார்களை ராகுல் ஏற்பாடு செய்து தருகிறார்.
இந்த ஆவணப்படத்தை பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,"காங்கிரஸ் ஆட்சியுள்ள மாநிலங்களில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த உதவியையும் ராகுல் காந்தி செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருக்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பகூட மாநில அரசுகள் அனுமதியளிக்கவில்லை.
ராகுல் காந்தி தற்போது 'கேமரா அரசியலில்' ஈடுபட்டுவருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து பேசுவது, அவர்களுக்கு தேவையான உதவியை வழங்க அல்ல; குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துன்பத்தை வைத்து அரசியல் செய்யவே ராகுல் இவ்வாறு செய்கிறார்.
ராகுல் காந்தி அரசியல் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார், குடிபெயர் தொழிலாளர்களுக்கு உதவ ஆர்வம் காட்டவில்லை. இதனால், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் ஒரு கட்சியாகவே காங்கிரஸ் கட்சியை மக்கள் கருதுகின்றனர். குடிபெயர் தொழிலாளர்களின் துன்பத்தைக குறைக்க முயற்சி எடுத்த பொறுப்பான கட்சியாக காங்கிரஸை மக்கள் நினைக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!