கரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடி நிலைக் குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாடிவருகிறார். அந்த வகையில், தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் உடனான கலந்துரையாடலை காங்கிரஸ் கட்சி நேற்று (ஜூன் 4) வெளியிட்டது.
அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, "உலகம் முழுவதும் இப்படி ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் என்று கனவிலும் எண்ணிப்பார்க்கவில்லை. இந்த காலக்கட்டத்தை உலகப் போரின் போது இருந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இத்தகைய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்க மாட்டாது என்றே எண்ணுகிறேன். ஆயினும் நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கரோனா பரவலை தடுக்கும் அதன் நோக்கத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டது.
இந்த ஊரடங்கு மக்களுக்கு எத்தகைய முன் அறிவிப்பும் வழங்காமல் அமல்படுத்தப்பட்டது. இதனை பணக்கார மக்களும், பெரும் முதலாளிகளும் எளிதில் கையாண்டுவிடுவர். ஆனால், ஏழை மக்களும், குடிபெயர் தொழிலாளர்களும் எவ்வாறு கையாளுவார்கள்.
மத்திய அரசு, ரயில், விமானப் போக்குவரத்து உள்ளிட்ட சில முக்கிய போக்குவரத்தை தடை செய்யும் முன்பு சிறிதேனும் மக்களின் நிலை குறித்து யோசித்திருக்கலாம். மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநில அரசுகளுடன் பகிர்ந்து மக்களுக்குத் தேவையான உதவிகளையும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்ததற்கு பதிலாக மக்களின் கைகளில் நேரடியாக பணம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கலாம்.
இந்த இக்கட்டான சூழலில் குடிபெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு கைவிட்டதால் அவர்கள் மீண்டும் வேலைக்காக பெரு நகரங்களுக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. அரசின் இந்த செயல் உலக நாடுகளுக்கு இந்தியா மீதான நன்மதிப்பை குறைத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் தொழில் தொடங்க எண்ணிய பல உலக நிறுவனங்களையும் பின்வாங்க வைத்துள்ளதாக தெரிகிறது" என ராகுல் காந்தி பேசியுள்ளார்.