கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட எட்டு மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்வரைவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.
இந்த மூன்று சட்ட முன்வரைவுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வின் முதல் நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாக்கள் விவசாயிகளை பெரும் நிறுவனங்கள் சுதந்திரமாக சுரண்டுவதற்கு வழிவகுக்கும்.
விவசாயிகள் இனி தங்கள் விளை பொருள்களை இனி சில்லறை விற்பனையில் மொத்த விலையில் வாங்கவோ, விற்கவோ முடியாது. அவர்களின் பொருளுக்கு அவர்கள் நினைக்கும் விலையை முன்வைக்க முடியாது.
அவர்கள் மிக குறைந்த விலைக்கே தமது விளைப்பொருள்களின் விலையை நிர்ணயிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை இந்த சட்ட முன்வரைவுகள் பாதுகாப்பற்கு பதிலாக காவு வாங்கியுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதை இந்த திருத்தங்கள் எளிமையாக்குகிறது.
விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் என்றே இந்த கருப்புச் சட்டங்களை கூற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "விவசாயம் என்பது மாநிலங்களின் களத்தின் கீழ் வரும் அரசியலமைப்பு விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை இந்த மத்திய அரசு கணக்கிலேயே கொள்ளவில்லை.
இந்த மசோதா மூலம், பல்வேறு மாநில அரசால் இயற்றப்பட்ட விவசாய உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய முனைகிறது. இது சட்டமன்ற மீறல் மற்றும் அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்பு மீது நடத்துப்பட்ட நேரடி தாக்குதல்.
மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த மசோதா கூட்டாட்சி முறையின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது.
விவசாயிகள், விவசாயம் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான மசோதாக்களை அறிமுகப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என தெரிவித்தார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி முடிவடையும் நாடாளுமன்றத்தின் இந்த 18 நாள் மழைக்கால கூட்டத்தொடர் அமர்வில் மத்திய அரசு 11 சட்டத் திருத்தங்களையும், 20 க்கும் மேற்பட்ட புதிய சட்ட முன்வரைவுகளையும் பாஜக கொண்டுவரவிருப்பது கவனிக்கத்தக்கது.