மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் நேரு குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியான அமேதியில் அவர் தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றம் செல்வதற்கு வயநாடு தொகுதி ‘கை’கொடுத்தது. இதையடுத்து, தன்னை வெற்றி பெறச்செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாள் சுற்றப்பயணமாக ராகுல் காந்தி கேரளா வந்தார்.
கேரளாவில் தனது கடைசி நாளான இன்று அவர், தான் பிறந்தபோது தன்னை பத்திரமாக இவ்வுலகிற்கு கொண்டுவந்த செவிலியர்களில் ஒருவரான ராஜம்மாவை சந்தித்துள்ளார். அவரை கட்டித் தழுவும் புகைப்படம் ஒன்று காங்கிரஸ் தலைவரின் வயநாடு ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராகுல் இத்தாலியில் பிறந்தவர் என்ற சர்ச்சை பரவிவந்த நிலையில் தற்போது ஓய்வுபெற்ற செவிலியர் ராஜம்மா, " 49 வருடங்களுக்கு முன்பு சோனியாவிற்கு பிரசவம் பார்த்த செவிலியர்களில் ஒருவர் நான் என்று கூறினார்". ராகுல் பிறந்த நொடி அவரை கையில் ஏந்தி அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தாகவும், மிகவும் அழகாக இருப்பார் ராகுல் என்றும் அப்போது நடந்த நெகிழ்ச்சிகரமான நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.
ராஜம்மா தனது ஓய்வு காலத்திற்கு பிறகு, பலமுறை காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ராகுலை பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியது.