புதுச்சேரி வில்லியனூர் பகுதியை அடுத்துள்ளது பிள்ளையார்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகர். இவர் அங்கு படிக்கும் பெண் பிள்ளைகளை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் சமீபத்தில் புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வில்லியனூர் காவல்துறையினர் ஆசிரியர் ராஜசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் ராஜசேகர் தலைமறைவாகிவிட்ட நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராஜசேகரை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.