பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் 'பெங்களூர் டர்ஃப் கிளப்' குதிரைப் பந்தய மைதானம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மதியம் ஏழு பந்தயங்கள் நடக்கவிருந்தன. இதனைக் காண அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அவரவருக்குப் படித்தமான குதிரைகள் மீது பணத்தைக் கட்டி ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இதனிடையே, அங்கு நடந்த முதல் பந்தயத்தின்போது சில குதிரைகள் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில், மூன்று வீரர்கள் நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதையடுத்து, பந்தயம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் குதிரைகள் மீது பணம் கட்டிய சூதாட்டக்காரர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்து டீவி, ஃபர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூரு துணை ஆணையர் (மத்திய) சேத்தன் சிங் ரத்தோர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு நடந்த சோதனை ஓட்டத்தின் போதே ட்ராக்கில் பிரச்னை இருப்பதாக தாங்கள் புகார் தெரித்திருந்ததாகவும், ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் பெங்களூர் டர்ஃப் கிளப் நிர்வாகத்தினர் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் குதிரைப் பந்தய வீரர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க : 15,000 நீதிபதிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய தலைமை நீதிபதி!