பஞ்சாப் மாநிலத்தில் தற்போது போலி மதுபான கலாசாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை வாங்கி அருந்தி மதுப்பிரியர்கள் பலரும் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர்.
அமிர்தசரஸ், தர்ன் தரன், படாலா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் போலி மதுபானங்கள் அருந்தி உயிரிழந்துள்ளனர். முச்சால் என்ற கிராமத்தில் மட்டுமே 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலி மதுபான விற்பனை பல்வேறு பகுதிகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மாநில காவல் துறை தீவிர விசாரணை, அதிரடி சோதனை என துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதன்படி மூத்த காவல் துறை அலுவலர்களைத் தலைமையாகக் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எட்டு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய கலன்கள், ரசாயனங்கள், போலி மதுபானங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போலி மதுபானம் தயாரிப்பதற்கான ரசாயனத்தை ஆய்வக பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!