புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
முன்னதாக, டிசம்பர் 6ஆம் தேதி, அவர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான மணிஷ் திவாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பர்னீத் கவுர், ரவ்னீத் பிட்டு, குர்ஜீத் ஆஜ்ல், அமர் சிங் ஆகியோருக்கு மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு சாலையிலேயே படுத்துறங்கினர். இதுகுறித்து ரவ்னீத் பிட்டு கூறுகையில், "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை கூட்டும் வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்த விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, சிங்கு, திக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் அவர்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர்" என்றார்.