பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஜூன் 16-17 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கோவிட்-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு இலவச கோதுமை மற்றும் பருப்பு வகைகளை வழங்க பிரதான் மந்திரி காரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள சலுகைகளை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேப்டன் அமரீந்தர் கூறுகையில், “ஏழை- எளியவர்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதை உறுதி செய்வதில் இந்த நீட்டிப்பு முக்கியப் பங்காற்றும். ஆகவே இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திற்கு இது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தவும் வேண்டும்.
கரேனா பொதுமுடக்கம் மூன்று மாதங்களை தொட்டுள்ளது. பஞ்சாபில் தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள 2.60 லட்சம் தொழில்துறை பிரிவுகளில், 2.32 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகள் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. எனினும் கடந்த கால ஊதிய இழப்புகள், ஏழை- எளிய மக்களின் பாதிப்புகள் தொடர்கின்றன. அவர்களின் பொருளாதார நிலை உயரவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 25ஆம் தேதிக்கு பின்னர் மாநில முதலமைச்சர்களுடன் ஐந்து சந்திப்புகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
கரோனா ஊரடங்குக்கு பிறகு கேப்டன் அமரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவது இது முதல்முறையல்ல. அந்த வகையில் அவர் எழுதிய கடிதங்களின் விவரம் வருமாறு:-
- பஞ்சாப் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) நிலுவை தொகை ஆறு ஆயிரத்து 752 கோடியை விடுவிக்கக்கோரி ஏப்ரல் 6ஆம் தேதி கடிதம் எழுதினார்.
- வைராலஜி மையத்திற்கு நிதி ஒதுக்கக் கோரி ஏப்ரல் 10ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.
- ஏப்ரல் 14ஆம் தேதி, தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கான உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரை அவர் வலியுறுத்தினார்.
- மே 1ஆம் தேதியன்று, குடிபெயர்ந்தோருக்கான ரயில்களை ஏற்பாடு செய்ய வேண்டி எழுதினார்.
- மே 8ஆம் தேதியன்று எழுதிய மற்றொரு கடிதத்தில், பொது முடக்கத்திலிருந்து (பூட்டுதல்) வெளியேறும் யுக்திகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'அரசின் பொறுப்பின்மையால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு' - மு.க. ஸ்டாலின்