கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் வெடிபொருள்களை ஏற்றியவந்த காரினை கான்வாய் மீது மோதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜம்மு சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆல்வி மற்றும் 18 பேர் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த வாரம் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் பல பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் பெயர்களும் அடங்கியுள்ளன.
இது தொடர்பான வழக்கு, வரும் 15ஆம் தேதி காஷ்மீர் சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வைஸ்-உல்-இஸ்லாம் என்பவர், தான் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுத உள்ளதாகவும், அதற்காக தனக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கை நாளை மறுநாள் (செப். 3) விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. இதற்கிடையில், குற்றவாளியின் இந்த விண்ணப்பத்தை எதிர்ப்பதாக என்ஐஏ ஆலோசகர் விபின் கல்ரா கூறியுள்ளார்.