கடந்த 2019 பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை அடுத்துள்ள அவந்திபோரா பகுதியில், ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ஆயுதக் காவல் படையினர் சென்று வாகனங்களில் கொண்டிருந்தபோது அவர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு தற்கொலைத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த தற்கொலைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த புல்வாமா தாக்குதல் வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் மனித வெடிக்குண்டாக வெடித்த ஆதில் அகமது தாருக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்த வழக்கில் மேலும் இரண்டு பேரை என்.ஐ.ஏ இன்று கைது செய்துள்ளதாக வெளியாகியுள்ளது. இந்த இருவரும் தந்தை-மகள் என சொல்லப்படுகிற்து. கைது செய்யப்பட்ட இருவரும் எங்கு, எப்படி, எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்பன போன்ற தகவல்களை புலனாய்வு அமைப்பினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரென குற்றஞ்சாட்டப்பட்ட யூசப் சோபன் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு முகமை தவறிய காரணத்தால் பிணை வழங்கி தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிபதி பர்வான் சிங் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புல்வாமா தாக்குதல்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!