இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த தினம் புதுச்சேரி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுச்சேரி அரசு செய்தித் துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் இன்று (ஆக.16) நடைபெற்றது.
இந்த விழாவில் கரோனா நோய்த் தொற்று காரணமாக குறைந்த அளவிலான தியாகிகளே அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், புதுச்சேரியில் அதிகப்படியாக உள்ள ஐஏஎஸ் அலுவலர்களும், துணைநிலை ஆளுநரும் திட்டங்களை தடுத்து வருவதாகவும், உண்மையான சுதந்திரம் பெற்றதாக புதுச்சேரி இல்லை எனக் கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தற்போது அரசு தள்ளப்பட்டு இருப்பதாகவும், மாநில மக்களின் உரிமைக்காக இரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது, மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.