புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீர் மேலாண்மைக்குக் கூடுதல் நிதி வழங்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழ்நாடு, புதுச்சேரி பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையைக் காலவரையின்றி ஒத்தி வைத்தார் .
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புதுச்சேரி மாநில மக்களின் உரிமைக்கு எதிரான செயல். மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு ஆளுநர் மூலம் மாநிலத்தின் உரிமைகளைத் தட்டிப் பறிப்பது வேதனை அளிக்கிறது. ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பார் என நம்புகிறேன்" என்றார்.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் 2019-20 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கடந்த மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது