இரண்டு நாள்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் பல்கரில் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து மூன்று பேரை கிராமத்தினர் அடித்து கும்பல் படுகொலைசெய்தனர். இது நாடு முழுவதும் சர்ச்சையாகியது. இது தொடர்பாக அம்மாநில காவல் துறையினர் 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இந்தக் கும்பல் படுகொலையைப் பயன்படுத்தி ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், தொலைக்காட்சியின் நிறுவனர் அர்ணாப் கோஸ்வாமி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கோபமடைந்தனர்.
இதனால் நாடு முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும், அர்ணாப் கோஸ்வாமி மீதும் காவல் துறையினரிடம் புகாரளித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
பின்னர் இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அனந்தராமன் பேசுகையில், ''144 தடை உத்தரவு இருந்தபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளோம்'' என்றார்.
இதையும் படிங்க: லாக்டவுனை பிகினியால் நேசிக்கும் 'கபாலி'யின் குமுதவள்ளி!