ஒப்பந்த தொழிலாளர்களை தினக்கூலி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் கடந்த 30 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில், இன்று(ஜன.20) இதே கோரிக்கையை முன்வைத்து, 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் போக்குவரத்து கழகத்தின் பணிமனை முன்பு அமர்ந்து எந்த பேருந்தையும் வெளியே செல்லவிடாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசின் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
250 ஒப்பந்த தொழிலாளர்களை தினக்கூலி தொழிலாளர்ளாக மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை மாநில அரசு நிறைவு செய்யும்வரை போராட்டம் நடத்தப்படும் என ஒப்பந்த பணியாளர்கள் கூறி அனைத்து பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக புதுச்சேரியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசு பேருந்துகளைவிட தனியார் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலிருந்து காரைக்கால், சென்னை, பெங்களூரு, குமுளி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.