புதுச்சேரியில் சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில காவல் துறை, மாநகரின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி கண்காணிக்கிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் செயின் பறிப்பு போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
அண்மையில், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் பிரதான கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது அவரது விலை உயர்ந்த செல்ஃபோனை அடையாளம் தெரியாதநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமைச்சருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்கள் என்ன கதி ஆவார்கள் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க புதுச்சேரி மாநில காவல் துறை தலைமை, ஏபிசிடி என்று அழைக்கப்படும் செயின் பறிப்பு, தடுப்புக் குழுவினை அமைத்துள்ளது.
இதுகுறித்து மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறுகையில், "ஒவ்வொரு காவல் நிலையத்திற்குட்பட்ட 12 முக்கிய இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் செயின் பறிப்பு சம்பவம் முற்றிலும் தடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு!