புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாட்சப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், 2017ஆம் ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை கூட்டுச்சதி செய்து அபகரிப்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை முக்கிய நடவடிக்கை எடுத்தது. இது சாதாரண போராட்டம் அல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த முறைகேடுகளை களைய முயன்றோம். தகுதியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தது.
மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றன. அரசு ஒதுக்கீடு செய்த இடங்களை தர மறுத்து பணம் கொடுப்பவர்களுக்கு சீட் வழங்குகின்றன என ஆளுநர் மாளிகையில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து கலந்தாய்வு நடந்த இடத்துக்கே சென்று ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதனால் ஆளுநர் மாளிகைக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. உரிய வழிமுறைகளுடன் மாணவர் சேர்க்கையை முறையாக நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் தகுதியான மாணவர்களின் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதன் மூலம் சட்டத்துக்கு விரோதமாகக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையின் விடாமுயற்சி, தொடர் நடவடிக்கை காரணமாக நல்ல பலன் கிடைத்தது. ஆளுநர் மாளிகை சார்பில் தன்னிச்சையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்மைகள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி ஆளுநர் மாளிகை சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ், இவ்விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைப் பெற ஆளுநர் மாளிகை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து சிபிஐ விசாரணை அதிகாரிகளிடம் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், இவ்விவகாரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த அதிகாரிகள் இப்போதும் சிபிஐ விசாரணையில் உள்ளனர் என்பதை தெரிவிக்கவில்லை.
கல்லூரிகள் மீதான விசாரணை, அதிகாரிகள் மீதான சிபிஐ விசாரணையில் அதிகாரம் படைத்தவர்களால் ஆதாரங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம். அப்போது விசாரணைக்குட்பட்ட அதிகாரிகள் இப்போது குற்றவாளிகளாக இல்லாவிட்டாலும் கூட கல்லூரிகளை மேற்பார்வையிட்டவர்கள் யார்?, மாணவர்கள் நேர்மையான இடத்தை பெறமுடியாமல் போனதற்கு யார் காரணம்?, தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து எப்படி பணம் பறிக்கலாம்?. சிலரிடம் விசாரணை செய்வதற்கான ஆதாரங்களை விசாரணை முகமைகள் பெறவில்லை. மூத்த அதிகாரிகளிடம் இருந்து அவர்களுக்கு அழுத்தம் கிடைத்திருக்கலாம். ஆளுநர் மாளிகை தரப்பில் பெற்றோர்கள், மாணவர்களுக்காக போராடினோம். மத்திய அரசும் போதிய ஒத்துழைப்பு அளித்தது. நீதிக்கான போராட்டம் மதிப்புக்குரியது என கருதுகிறேன்.
இந்த போராட்டம், புதுவை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நியாயமான கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த போராட்டம் நடந்திருக்காவிடில் இப்போதைய மாணவர்கள் நியாயமான கட்டணத்தில் படிக்க முடியாது. அதிகாரிகளின் அழுத்தம் இன்றி சிறந்த மருத்துவர்களாக அவர்கள் வளர்ந்து வருகின்றனர். சிக்கல்களை கண்டு துவளாமல், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை இந்த போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது. இன்னும் பல பாடங்களையும் இப்போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க...ஈடிவி பாரத் ஊடகத்திற்கு விருது!