புதுச்சேரி மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழும் மணக்குள விநாயகர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சுமார் 30 வயதான பெண் யானை லட்சுமி, கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் வனத்துறையினர் ஆணைப்படி புத்துணர்வு, மருத்துவ சோதனைக்காக பெருந்தலைவர் காமராஜர் அறிவியல் வேளாண் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே யானையை மீண்டும் மணக்குள விநாயகர் கோயில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பக்தர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை16) மணக்குள விநாயகர் கோயில் தேவஸ்தானம் சார்பில் முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமி நாராயணன் ஆலய வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'முதலமைச்சர் நாராயணசாமியின் முயற்சியால் மீண்டும் கோயிலுக்கு லட்சுமி யானை அழைத்து வருவதற்கும், யானை தொடர்ந்து நல்ல முறையில் மருத்துவ ஆலோசனைப்படி, பராமரித்து வருவதற்கும் அறிவுறுத்தப்பட்டு தேவஸ்தான தலைவருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து யானை லட்சுமி வருகிற 18ஆம் தேதி (நாளை) பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து, ஏற்கெனவே தங்கியிருந்த ஈஸ்வரன் கோயில் உள்ள இடத்திலேயே தற்சமயம் தங்கவைப்படும். வருங்காலத்தில் வனத்துறையின் ஆலோசனைப்படி ஒரு புதிய இடத்தில் பராமரிப்புக்கு ஏற்றவாறு அவ்விடத்தை சீரமைத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி யானையை உரிய முறையில் பராமரித்து வருவது என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஆடி மாத உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்!