புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில் திட்டங்கள் அறிவிக்கும் திமுக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலை வைக்கக்கோரியபோது பதில் அளிக்காதது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் அவர் பேசினார். அதற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, கீதா ஆனந்த், வெங்கடேசன் ஆகிய மூவரும் எதிர்ப்பு தெரிவித்தும், அதனைக் கண்டிக்காத முதலமைச்சர், அமைச்சர்களைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தேவையில்லாமல் மறைந்த தலைவர் கருணாநிதியையும் தளபதி ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார். புதுச்சேரி காங்கிரஸ் அரசு கருணாநிதிக்குச் சிலை வைப்பதாகக் கூறி இதுவரை வைக்கவில்லை.
காரைக்காலில் உள்ள தெருவிற்கு கலைஞர் கருணாநிதி என பெயர் வைப்பதாக அறிவிக்கப்பட்டும், அதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் அன்பழகன் அவதூறாகப் பேசியது முறையல்ல. அதனைப் புதுச்சேரி அரசும் கண்டிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்" என்றனர்.
இதையும் படிங்க: கிரண் பேடியை கண்டித்து 2ஆவது நாளாக சுகாதார ஊழியர்கள் போராட்டம்!