புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மிசோரம் பகுதியில் பணிபுரிந்தபோது அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவச் சீட்டை தனது மகளுக்காக முறைகேடாகப் பெற்றார் எனவும், அதிலும் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தியதால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுத்துள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்து, சிறப்பு வகுப்பில் பயணித்ததாகக் கூறி, அரசுப் பணத்தைப் பெற்றுள்ளார் எனவும், காவலராகப் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிரண்பேடி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்ற நான்கு வருடங்களில் மத்திய அரசிடமிருந்து இதுவரை அவர் எவ்வளவு தொகையைப் பெற்றார் எனக் கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது 36 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஒரு ரூபாய்கூட தன் மீது ஊழல் புகார் எழுந்ததில்லை எனவும், தனது வாகனத்தை விற்று மக்களுக்கு உதவியளித்துள்ளதாகவும் கூறிய அவர், தன் மீது எந்தப் புகாரைக் கூறினாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: 'மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை முதலமைச்சர் மறைக்க முயல்கிறார்' - ஆளுநர் கிரண்பேடி