புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி எல்லையான வாஞ்சூர் சோதனைச் சாவடியில் தமிழ்நாட்டு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காரணத்தால், புதுச்சேரியின் காரைக்கால் வழியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா தொற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை தடுக்க மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனங்கள் காரைக்காலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அடையாள அட்டையை காட்டியப்பின் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரி எல்லையில் அமல்படுத்தப்பட்டுள்ள திடீர் கட்டுப்பாட்டால் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.