புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் தற்போது பலர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான கண்காணிப்பு மற்றும் ஆலோசனை சேவையை இயக்குவதற்கான புதிய தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை மாநில அவசரகால செயல் மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
இந்த இலவச சேவை மூலம் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தொலைபேசிக்கு ஆலோசகர்கள் அழைப்பு விடுத்து, அவர்களின் உடல் நலம் குறித்தும், செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகள் குறித்தும் தொடர்ந்து 14 நாள்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
இதனை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே உலாவுவதால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தன்னால் முடிந்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் செய்து வரும் நிலையில் அதனை குறை கூறாமல் மக்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டும்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் வெளியே சுற்றினால் ஐந்து நாள்களில் அவரால் 100 பேருக்கு தொற்று பரவுகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் ஊரடங்கை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகயை அரசு எடுக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.