புதுச்சேரி கரோனா வைரஸ் பரவலில் முதல்நிலைலை அடைந்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதத்திலும் அரசு சார்பில் அனைத்து அறிவிப்புகளும் காணொலி மூலமே வெளிவருகிறது.
இந்நிலையில் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள காணொலியில், மாநிலத்தில் இதுவரை கரோனா வைரசை விரைவில் கண்டறியும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுவந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 35 நபர்களுக்கு இன்று கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டது.
நிவாரணப் பொருள்கள் வழங்க தொடர்ந்து மக்களைச் சந்தித்துவரும் புதுவை சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் முடிவுகள் வரும் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநிலத்தில் இதுவரை ஒன்பது லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு ஓரிரு நாள்களில் சோதனை நடத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுவரும் இந்நேரத்தில், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலிருந்து அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு நாள்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்.