புதுச்சேரி அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது திரைப்பிரபலங்களைக் கொண்டு விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த காணொலி, புதுச்சேரியின் அழகான கடற்கரை, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் எனத் தொடங்குகிறது. இதமான பின்னணி இசையுடன் கரோனா விழிப்புணர்வு கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை அடைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு கரோனா விழிப்புணர்வு வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. முன்னதாக, மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்களின் அறிவுரைகள் அடங்கிய வீடியோக்களும் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து, வரும் முன் காப்போம் என்ற தலைப்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சித்த ஆயுர்வேத மருத்துவரின் வழிகாட்டல்கள் அடங்கிய வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
ஆரோக்கிய சேது என்ற செயலியை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் அவசியம், அதை பதிவிறக்கம் செய்யும் வழிமுறை, பயன்பாடு குறித்து தற்போது காணொலி வெளியிடப்பட்டது. இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை வெளியிட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன், நடிகை மதுமிதா, நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் செந்தில் பேசிய இக்காணொலி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் சுந்தரேசன், இயக்குனர் வேல்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில் மக்கள் தொடர்பு உதவியாளர் கணபதி தலைமையிலான குழுவினர் வீடியோ தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' - சனம் ஷெட்டி