புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கட்சியில் சேர்பவர்கள் தங்களுக்கு பதவி வேண்டும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் வர வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கட்சிக்காக உழைப்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென சோனியாகாந்தி உறுதியாக இருப்பதாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், பணமிருந்தால் பதவியை பெறலாம் என்ற நிலை பல கட்சிகளில் உள்ளது. தற்போது அந்த நிலை காங்கிரஸ் கட்சியிலும் நிலவுவதாக வேதனையுடன் தெரிவித்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் தேர்தலில் தோல்வியுற்றாலும், கட்சி உயிரோட்டமாக உள்ளது என்றும், கட்சி தொண்டர்களை தலைவர்கள் மதிக்க வேண்டும், தொண்டர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவிக்கு வந்துவிட்ட பிறகு தொண்டர்களை மதிக்காமல் இருந்தால் பதவிக்கு வந்தவர்களை தொண்டர்கள் தூக்கி எறிவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.