புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அதிகளவில் நடமாடுவதாகவும், நோயின் தாக்கத்தை உணராமல் அலட்சியமாக உள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளில் 90 விழுக்காட்டினர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளதாகவும், விடுதிகளில் பணிபுரியும் 515 ஊழியர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், இன்று இரவு 9 மணி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை முதல் 31ஆம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்றும், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளை சில நாள்களுக்கு ஒத்திவைக்கவும், துக்க நிகழ்வுகளை விரைவில் நடத்தவும், பொதுமக்கள் முகக்கவசம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:144 தடை உத்தரவு மீறல்!